சனி, 9 மே, 2009

உன்னோடும் இருந்திருக்கிறேன் !

எப்போதும் கனவுகளில்
பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட
உன்னோடும் இருந்திருக்கிறேன் !

கண்ணம்மா என் காதலி - 1

சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ! - இதுபார்,
கன்னத்து முத்தமொன்று!

- பாரதியார்.

வெள்ளி, 8 மே, 2009

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்.