வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதலின் மீள்கடிதம்

பிப்ரவரி 14
எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள்
கேள்வியை எழுப்பியது
என்ன ஆச்சு எனக்கு?
எனக்குள் காதல் செத்து விட்டதா....
தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை....
ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.
மிக மெல்லிய காதல் கவிதை.

- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

சில எதிர்மறைக் குறிப்புகள் !

ஓட்டுநரின் விழிப்பின் மீது மட்டும்
நம்பிக்கை வைத்து
உறங்கிவிட முடிவதில்லை
பேருந்துப் பயணத்தில்

இரண்டு மூன்று சந்துகள் திரும்பி
இல்லத்தின் முன் நிறுத்திய ஆட்டோக்காரர்
பேசியதை விடவும் அதிகம்
கேட்காமல் இருந்ததில்லை ஒரு போதும்.

திரைப்படத்தின்
இடைவேளைகளில் எதிர்ப்படும் நண்பனிடம்
‘சினிமாவுக்கா?’ எனும்
அசட்டுக் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை
எவ்வளவு முயற்சித்தும்.

திறமையின் பெரும்பகுதி
நல்லவனாய் நடிப்பதற்கென்றே
செலவாகிப் போகிற அபத்தத்தை
என்ன பெயரிட்டு அழைப்பது?

கனவை முழுமைப்படுத்த முடியாமலே
கலைந்து போகிறது
ஒவ்வொரு விடியற் பொழுதும்
இப்படி எதிர்மறைகளும்
இயலாமைகளும் இணைந்தே
கட்டமைக்கின்றன
இயல்பான வாழ்வை.

-நன்றி: தமிழ் மணவாளன்
கல்கி (10-08-2008).

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் !

இன்றைய கல்விமுறையின் நோக்கமே,இருப்பதையெல்லாம்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி
என்பது பற்றித்தான் இருக்கிறது.

ஒரு இலையைப் பார்த்தால் கூட,அதிலிருந்து தனக்கு
ஏதாவது கிடைக்குமா என்று சுயநலத்தோடு பார்க்கும்
மனப்பான்மை மனிதனுக்கு வந்துவிட்டது.
மரம்,காற்று,பூமிக்கடியில் புதைந்துள்ள இயற்கைச்செல்வம்
என்று எதையும் அவன் விட்டுவைக்கவில்லை.

எறும்புக்கு ஓர் உலகம் உண்டு. யானைக்கு ஓர் உலகம் உண்டு.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதனதன் உலகம் உண்டு.
இயற்கையைப் பொறுத்தவரை,
மனிதனும் மற்ற உயிரினங்களைப் போல ஓர் உயிரினம்தான்.

ஆனால்,மனிதன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் தெரியுமா?

ஒருகாகம்,ஒரு பட்டாம்பூச்சி,ஒரு மனிதன் மூவரும் இறந்துபோயினர்.
மேல் உலகை அடைந்து,படைத்தவன் முன் நின்றனர்.

கடவுள் பட்டாம்பூச்சியிடம் கேட்டார்.
’’உனக்கு எங்கே இடம் வேண்டும்?’’

‘’பூமியில் பல மகரந்தச் சேர்க்கைகளுக்கு நான் உதவினேன்.எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சந்தோஷம்!’’என்றது பட்டாம்பூச்சி.

‘’உனக்கு!’’ என்றார்,காகத்திடம்.

‘’பல விதைகளை நான் வெவ்வேறு இடங்களில் துப்பியதால்தான்
காடுகள் வளர்ந்து பெருகின.இயற்கைக்கு உதவிய எனக்கும்
சொர்க்கத்தில் இடம் வேண்டும்’’ என்றது காக்கை.

மனிதனின் பக்கம் திரும்பினார் கடவுள்.

‘’உனக்கு எங்கே இடம் வேண்டும்’’

‘’ஹலோ,நீங்கள் உட்கார்ந்திருப்பது என் நாற்காலி.எழுந்திருங்கள்’’
என்றான் மனிதன்.

- நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஆனந்தவிகடன் (16-04-08).

வளநாடன் கவிதைகள்

சக்கரங்கள்
அழுத்தி அழுத்தியே
பழுதாகியும் பழுப்பேறியும் போன
பயணச்சாலையாய்
மல்லாந்து கிடக்கிறது வாழ்க்கை
வேண்டிய மட்டும் விரைவாய்
தடிம தார்ப்பூச்சு
தேவையென்றிருக்க
கடந்து செல்லும்கோடை காலத்து மேகம்
கைத்தவறிச் சிந்திய
ஊசித் தூரலில் நனைந்து
ஈசல் பூச்சியையொத்த
ஒற்றை நாள்
ஆயுள் நிறைவுகளில் சந்தோசித்து
புதிதாகிப் போன பூரிப்போடு
வாகனங்கள் தாக்கிய வதையை
தற்காலிகமாய் மறந்து
வளைந்து நெளிந்து நீள்கிறது
வாழ்க்கை…..


நீரூற்றி
நிதம் நீவிக்கொடுத்து
தனிமை தவிர்க்க
அதனோடு பேசி
பச்சையம் காத்துக்கொள்ள
சூரிய ஒளிப் பிடித்து ஊட்டி
காற்றோடு சண்டையிட
தடியொன்றும் ஊன்றிக்கொடுத்து
வண்டோ பூச்சியோ
வராவண்ணம் காத்து
மூப்படைந்த இலைகளகற்றி
இத்தனை
கரிசனங்களோடு
கண்காணித்திருக்க
ஒரு
இரவோடு இரவாக
எனக்குத் தெரியாது பூவெய்தி நிற்கும்
தொட்டிச் செடி

- நன்றி: http://paalaikuyilgal.wordpress.com

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நிலையாமை

அரசன் எவனோ குருதி வடித்(து)
ஆழப் புதைந்த சவக்குழியில்
விரைவில் முளைக்கும் ரோஜாவை
விஞ்சிச் சிவந்த மலரேது?

உருவும் அழகும் பூத்தென்றோ
உதிர்ந்த பெண்ணின் உடலந்தான்
விரையார் சோலைப் பசுங்கூந்தல்
விஞ்சை அரும்பாய்க் கொஞ்சுமடா!


வாழ்க்கையாட்டம்

இந்த வையம் இரவு பகல்
எழுதும் தாயக் கட்டமடா!

வந்த விதியோ மனிதர் தமை
வைத்துக் காயாய் விளையாடி
முந்தி நகர்த்தி நகைக்குமடா!

மூலைக் கிழுத்து வெட்டுமடா!

பிந்தி ஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமடா!

- நன்றி: பேராசிரியர் அ. சீனிவாசராகவன்
மற்றும்
http://www.sify.com

தேவதைகளின் தேவதை

உனக்கு திருஷ்டி சுற்றி
வாசலில் உடைந்த பூசணிக்காய்
நன்றி சொன்னது…
உன் அழகு முகத்தை
மூன்று முறை
சுற்றிக் காட்டியதற்காக.



கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்துகொள்ளுமா?

நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக்
குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என்னை நானே!



உன் பிறந்தநாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டு இருக்கின்றன…

பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்ப்
பிறந்திருக்க வேண்டும் என்று.

- தபூ சங்கர் .

சனி, 4 ஏப்ரல், 2009

முடியலத்துவம் !

நிச்சயதார்த்தம்

பெருந்தொகை

கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்

நிச்சயிக்கப்பட்ட பெண்ணோடு

நித்தம் போடும் கடலையில்

'புத்தகப் புழு' நானென

பீற்றிக்கொள்கிறான்

எதிர்முனையில் அவள்

குறுநகை புரிவதரியாமல் !

தத்துவக் கோழி

எங்கள் வீட்டு

வான்கோழி

பிறக்கவுமில்லை

இறக்கவுமில்லை

கடைசி வரை

பறக்கவுமில்லை !

கல்யாண மன்னன்

பின்னலிட்ட கோபியரின்

கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல்

லீலை செய்தான்...

களி தின்கிறான் !

ஆனபயன்

கண்டதும்

கற்றவன்

பண்டிதன் ஆவான்

ஆகி?!

குத்துப்பட்டு எழுதுவான் !

நதிமூலம்

கோவிந்த் பி. சுவாமியின்

பாஸ்போர்ட்டில்

பழனிச்சாமி,

சன் ஆஃப் கோயிந்தன்,

கொமாரபாளையம்.

என அச்சாகி இருந்ததை

நான் பார்க்கவில்லை !

வீடு திரும்புதல்

பின்னிரவு

பீர் பாட்டில்களில்

சைட் டிஷ்களை

துவம்சம் செய்யும்

குடிகாரர் அல்லாதவர்கள்

செய்த தவறுக்காக

வருத்தப்பட்டு

பாரம் சுமக்கிறார்கள் !

- நன்றி: செல்வேந்திரன்.

ஆனந்த விகடன் (05.12.2007).

கிராமத்து ஆல்பம்


- நன்றி: குமுதம் (16.01.2008).

நீயில்லாமல்...

உன் இதழ் 'தோன தோன'ப்பைக்
கேட்காமல் இரவுகளில்
தூக்கம் தொலைக்கிறேன் !

எப்படி முயற்சித்தாலும்
இரண்டு நாட்களுக்கு மேல்
வீட்டுச் சாவியைப் பத்திரப்படுத்தி
வைக்கத் தெரியவில்லை !

கண்ணாடியில் நீ
எப்போதோ ஒட்டிவைத்த
ஸ்டிக்கர் பொட்டு
இப்போது
என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது !?

'ஆண்ட்டி இன்னுமா வரல?'
'அக்கா எப்ப வருவாங்க?'
'டாமி ஏங்கிடுச்சில்ல!?'
அக்கம்பக்கத்தவரின் விசாரிப்பில்
என்னைப்பற்றி ஏதுமிருப்பதில்லை !

பால்காரன் மணிச் சத்தம்
பூக்காரி கூப்பாடு
ஒலிக்காத நம் வாசலில்
ஏனோ ஒரு வெறுமை !

தனிமையில் யோசித்திருக்கிறேன்
செல்போன் ஒலிக்கிறது
கோடை லீவுக்கு
அம்மா வீடு சென்ற
அன்பு மனைவி கேட்கிறாள்

"என்ன, நானில்லாதது
ஜாலியா இருக்குமே !"

- நன்றி: எம் . ஸ்டாலின் சரவணன்,

கறம்பக்குடி.

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

காசி ஆனந்தன் கவிதைகள்

வல்லாண்மை

பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன் !


இயக்கம்

வைக்காதே
சிலை
தொழிலாளிக்கு
எங்கும்

செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும் !

தாய்

சொன்னாய்
அடிமைப்பட்டதை
தாய்மொழியும்
தாய்நாடும்

சொல்
முதலில்
தாய்
அடிமைப்பட்டதை !


போராளி

செத்தவனுக்காக
அழுதவன்
நீ

இவன்
அழுதவனுக்காக
செத்தவன் !

மண்

மண்ணில் உழவன்
வாழ்க்கை
அறுவடைக்கு
முன்

உழவன்
வாழ்வில்
மண்
அறுவடைக்குப்
பின் !


தேர்தல்

'ஏழைகளின்
நண்பன்
நான்'

இம்முறையும்
வேட்பாளர்
முழக்கம்
சேரியில்...

என்றென்றும்
நாங்கள்
ஏழையாய்...
அவர்கள்
நண்பராய்...

நாதஸ்வரம்

கலைஞன்
வாயிலிருந்து
நாதஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்

நாதஸ்வரத்திலிருந்து
ரசிகன்
காதில்
பாய்ந்தது
தேன் !


தமிழன்

களத்தில்
இருந்த
வில்
இசை
கருவியாய்...

வேல்
சாமியாய்...

குதிரை
விளையாட்டாய்...

தமிழன்
அடிமையாய் !

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம்
கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி !


குமுறல்

செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்...

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும்
நாள்
எது ?