வெள்ளி, 3 ஏப்ரல், 2009

காசி ஆனந்தன் கவிதைகள்

வல்லாண்மை

பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன் !


இயக்கம்

வைக்காதே
சிலை
தொழிலாளிக்கு
எங்கும்

செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும் !

தாய்

சொன்னாய்
அடிமைப்பட்டதை
தாய்மொழியும்
தாய்நாடும்

சொல்
முதலில்
தாய்
அடிமைப்பட்டதை !


போராளி

செத்தவனுக்காக
அழுதவன்
நீ

இவன்
அழுதவனுக்காக
செத்தவன் !

மண்

மண்ணில் உழவன்
வாழ்க்கை
அறுவடைக்கு
முன்

உழவன்
வாழ்வில்
மண்
அறுவடைக்குப்
பின் !


தேர்தல்

'ஏழைகளின்
நண்பன்
நான்'

இம்முறையும்
வேட்பாளர்
முழக்கம்
சேரியில்...

என்றென்றும்
நாங்கள்
ஏழையாய்...
அவர்கள்
நண்பராய்...

நாதஸ்வரம்

கலைஞன்
வாயிலிருந்து
நாதஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்

நாதஸ்வரத்திலிருந்து
ரசிகன்
காதில்
பாய்ந்தது
தேன் !


தமிழன்

களத்தில்
இருந்த
வில்
இசை
கருவியாய்...

வேல்
சாமியாய்...

குதிரை
விளையாட்டாய்...

தமிழன்
அடிமையாய் !

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம்
கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி !


குமுறல்

செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்...

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும்
நாள்
எது ?