வெள்ளி, 10 ஏப்ரல், 2009

சில எதிர்மறைக் குறிப்புகள் !

ஓட்டுநரின் விழிப்பின் மீது மட்டும்
நம்பிக்கை வைத்து
உறங்கிவிட முடிவதில்லை
பேருந்துப் பயணத்தில்

இரண்டு மூன்று சந்துகள் திரும்பி
இல்லத்தின் முன் நிறுத்திய ஆட்டோக்காரர்
பேசியதை விடவும் அதிகம்
கேட்காமல் இருந்ததில்லை ஒரு போதும்.

திரைப்படத்தின்
இடைவேளைகளில் எதிர்ப்படும் நண்பனிடம்
‘சினிமாவுக்கா?’ எனும்
அசட்டுக் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை
எவ்வளவு முயற்சித்தும்.

திறமையின் பெரும்பகுதி
நல்லவனாய் நடிப்பதற்கென்றே
செலவாகிப் போகிற அபத்தத்தை
என்ன பெயரிட்டு அழைப்பது?

கனவை முழுமைப்படுத்த முடியாமலே
கலைந்து போகிறது
ஒவ்வொரு விடியற் பொழுதும்
இப்படி எதிர்மறைகளும்
இயலாமைகளும் இணைந்தே
கட்டமைக்கின்றன
இயல்பான வாழ்வை.

-நன்றி: தமிழ் மணவாளன்
கல்கி (10-08-2008).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக