வெள்ளி, 10 ஏப்ரல், 2009

வளநாடன் கவிதைகள்

சக்கரங்கள்
அழுத்தி அழுத்தியே
பழுதாகியும் பழுப்பேறியும் போன
பயணச்சாலையாய்
மல்லாந்து கிடக்கிறது வாழ்க்கை
வேண்டிய மட்டும் விரைவாய்
தடிம தார்ப்பூச்சு
தேவையென்றிருக்க
கடந்து செல்லும்கோடை காலத்து மேகம்
கைத்தவறிச் சிந்திய
ஊசித் தூரலில் நனைந்து
ஈசல் பூச்சியையொத்த
ஒற்றை நாள்
ஆயுள் நிறைவுகளில் சந்தோசித்து
புதிதாகிப் போன பூரிப்போடு
வாகனங்கள் தாக்கிய வதையை
தற்காலிகமாய் மறந்து
வளைந்து நெளிந்து நீள்கிறது
வாழ்க்கை…..


நீரூற்றி
நிதம் நீவிக்கொடுத்து
தனிமை தவிர்க்க
அதனோடு பேசி
பச்சையம் காத்துக்கொள்ள
சூரிய ஒளிப் பிடித்து ஊட்டி
காற்றோடு சண்டையிட
தடியொன்றும் ஊன்றிக்கொடுத்து
வண்டோ பூச்சியோ
வராவண்ணம் காத்து
மூப்படைந்த இலைகளகற்றி
இத்தனை
கரிசனங்களோடு
கண்காணித்திருக்க
ஒரு
இரவோடு இரவாக
எனக்குத் தெரியாது பூவெய்தி நிற்கும்
தொட்டிச் செடி

- நன்றி: http://paalaikuyilgal.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக