வெள்ளி, 8 மே, 2009

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்.

கண்ணம்மா என் காதலி - 6

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!


வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!


வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!


காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!


நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!


தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

- பாரதியார்.

வியாழன், 7 மே, 2009

கண்ணம்மா என் காதலி - 5

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையிலே
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!

மேனி கொதிக்குதுதடீ - தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!

வானிலிடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!

மோனத்திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.

நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

- பார'தீ'யார்.