வெள்ளி, 22 மே, 2009

கவிதைகள் சில.....

தவம்
நடந்து கொண்டே இரு
நதி போல
நான் காத்திருப்பேன்
ஓரிடத்தில்
கடலாக


பயணம்
பாதை எதுவெனத் தெரியாதாயினும்
தொடருமென் பயணம்
முடிவிலி நோக்கி....

தேடல்
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லாரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை.


கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்க விடவில்லை
சில்லறை பாக்கி


நட்பு
உன் நட்பை நேசித்தபின்
உன்னைப் பார்க்கும்போது
புன்னகை செய்யும்
என் இதழ்களை விட…
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்.

தோற்ற மயக்கம்
துல்லிய நீர்ப்பரப்பில்
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குருரம்
- நன்றி : http://murugadas.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக