சனி, 9 மே, 2009

பெண்பால் கவிதைகள்

நட்பு

எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா,
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின்
எதிரில்

சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை

காதல்

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???

இயலாமை

பரிதாபங்களை
யாசித்தல்
கழிவிரக்கத்தை
தறுவதாயிருக்கிறது.
இயலாமைகளை
உரத்துச்சொல்வதை
தடுக்கிறது
சுயமரியாதை

நடப்பின்
இருப்புகளை
உதறவோ
உடைக்கவோ
முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

பெண்ணியம்

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது
என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.

போதை

பிரஞ்ஞையற்று கிடக்குது
உலகம்
விழுந்து கிடக்கும்
குடிகாரனைப்போல
சுற்றிலும்
குப்பை கூளம்
அவமானம் ஆக்ரமிப்பு
அன்பு அலட்சியம்
துரோகம் நட்பு
மற்றும் காமம்.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக