சனி, 9 மே, 2009

முகமூடிக்கவிதைகள்

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்
மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது
எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.
ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
விகிதாசாரங்களில்
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை

'ம்' என்றோ
'இல்லை' என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்
வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை

முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்

வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்
ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்
தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது
காய்களோ
கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.
நடைமேடை தூண்களுக்கு
இடயே
தெரியும்
விரைத்த கால்களும்
அதை சுற்றி நின்ற
கால்களில் இருந்த
தயக்கங்களூம்
தரும்
அச்சத்தை
தாண்டியும்
மனம்
நிம்மதித்தது
அவர்
நமக்கு
தெரிந்தவரில்லை
என்பதில்
வாழ்க்கை
மிகவும் சிக்கலாகித்தான்
போனது
வாழ்த்துக்களின்
தடமும்
புரிந்தபோது.
சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்
இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???
சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
போல
குறுக்கும் நெடுக்கும்
கோடுகள் ஏதுமின்றி
நீண்டு செல்கிறது
நெடுஞ்சாலையின்
மஞ்சள் கோடு
வாழ்க்கை
அதுபோலில்லை
அது போலியில்லை
நாய்களோ
பூனைகளோ
குதிரைகளோ
எனக்கு நெருக்கமில்லை
உருவகப்படுத்த
விலங்கினம் தேடினேன்
என்னுள்ளிருக்கும்
தாழ்திறவா
ஆரண்ய கதவுகளில்
“இடமில்லை” அட்டைகள்
பயணங்கள்
தன் இலக்குகளை
இன்றில்லாவிடினும்
நாளை அடையலாம்
சமரசங்களற்றபோது
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக